"#HemaCommittee-யின் முழு அறிக்கையையும் பெற முயற்சி" - தேசிய மகளிர் ஆணையம் தகவல்!
ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் பலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் கூறியதாவது, "பெண்களின் உரிமைகள், பாதுகாப்பான மற்றும் சமத்துவ பணிச்சூழலை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவாதம் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால், நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன."
இவ்வாறு தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.