நோபல் பரிசு பெற வேண்டுமென்றால் டிரம்ப் இதை செய்ய வேண்டும் - பிரெஞ்சு அதிபர் மக்ரோன் கருத்து..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தி உள்ளேன். ஆகையால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இக்கருத்தை வலியுறுத்திருந்தார்.
இந்த நிலையில் இது பற்றி நியூயார்க்கில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன்,
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற விரும்பினால், அவர் காசாவில் போரை நிறுத்த வேண்டும். இதைசெய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார், அது அமெரிக்க ஜனாதிபதிதான். காரணம் என்னவென்றால், காசாவில் போரை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களையும், உபகரணங்களை நாங்கள் வழங்குவதில்லை. அமெரிக்காதான் வழங்குகிறது," என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போரில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அண்மையில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன. இதற்கு இஸ்ரேல் சார்பில் பெரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.