பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டம்..!
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
அண்மையில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் இத்தாலியில் காஸா போரை நிறுத்துவது, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் பாலஸ்தீனம் தனிநாடு அங்கீகரிப்ப்பிற்கு எதிரான நிலைப்பாட்டால், அவருக்கு எதிராக இத்தாலி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலி மிலனில் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 80 காவல்துறையினர் காயமடைந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை கண்டித்த பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, "மிலன் மற்றும் பிற இத்தாலிய நகரங்களில் நடந்த வன்முறைகள் மூர்க்கத்தனமானது மற்றும் வெட்ககேடானவை என்றும் இம்மாதியான வன்முறைகளால் காசாவில் உள்ள மக்களின் வாழ்க்கையில் எதையும் மாற்றாது" என்றும் அவர் கூறியுள்ளார்.