அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!
தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 அடி அகலம், 200 அடி நீளத்திற்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி, கட்சி சார்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் 33 நிபந்தனைகளை விதித்த காவல் துறை, அவற்றில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. இதனால், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கூடுதல் விளக்கங்களைக் கேட்டு, விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார் கடந்த 14ம் தேதி நோட்டீஸ் வழங்கினார்.
இதையும் படியுங்கள் : அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் - #Chennai போக்குவரத்துக் கழகம்!
இதை புஸ்ஸி ஆனந்த் சார்பில், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு வந்த தவெக தொகுதிப் பொறுப்பாளர் சக்திவேல் பெற்றுக் கொண்டார். அந்த நோட்டீஸில் காவல் துறை சார்பில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் வருமாறு:
"தவெக மாநில மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து 1.50 லட்சம் பேர் வந்து பங்கேற்பர் என்றும், இதற்காக 50,000 நாற்காலிகள் போடப்படும் எனவும் தெரிவித்துள்ளீர்கள். மாநாட்டுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வர உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த விழுப்புரம் - சென்னை சாலையில் 28 ஏக்கர் நிலமும், கூடுதலாக 15 ஏக்கர் நிலமும், வடதமிழ்நாட்டிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த 40 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.
எனவே, இதற்கான திட்டத்தையும், வரைபடத்தையும் காவல் துறை வசம் வழங்க வேண்டும். மாநாடு நடைபெறும் தினம் வடகிழக்கு பருவமழைக் காலமாக இருப்பதால், வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. அதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகிற வாகனங்களான கார், பேருந்து, வேன் ஆகியவற்றின் விவரங்களை காவல் துறைக்கு வழங்க வேண்டும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.