“அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயர் திரிணாமுல் காங்கிரஸ்!” - பிரதமர் மோடி விமர்சனம்!
அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயர் திரிணாமுல் காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கம், நாடியா மாவட்டத்தில் இன்று(மார்ச்.2) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, மாநிலத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ரூ.22,000 கோடியிலான திட்டங்களை மக்களிடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கு வங்க மக்களை திரிணாமுல் காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. மக்கள் தொடர்ச்சியாக அக்கட்சிக்கு வாக்களித்து வந்தனர். ஆனால், இந்த கட்சி, அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயராகிவிட்டது. திரிணாமுல் காங். பெண்களை வெறும் வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
பா்கானா மாவட்டம், சந்தேஷ்காளி பகுதி கிராமங்களில் திரிணாமுல் காங்கிரஸ் நிா்வாகியான ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததோடு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சந்தோஷ்காளி பெண்களின் குரல் மாநில அரசின் காதுகளில் விழவில்லை. மேற்கு வங்கத்தை பொருத்தவரை, இங்கு தாங்கள் எப்போது கைது செய்யப்பட வேண்டுமென்பதை குற்றவாளிகள் தான் தீர்மானிக்கின்றனர். சந்தேஷ்காளி பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்தவை வெட்கக்கேடானவை. அக்கட்சியைப் பொருத்தவரை, மேற்கு வங்கத்தின் வளர்ச்சி அவர்களுக்கு முக்கியமல்ல, மாறாக, ஊழலும் துரோகமும் தான் அக்கட்சிக்கு முக்கியமானவை. மேற்கு வங்க மக்களை, வறுமையின் பிடியில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதே அக்கட்சியின் விருப்பம்.
மத்திய அரசு ஏழை மக்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியது. ஆனால், மாநில அரசு மேற்கு வங்க மக்கள் மத்திய அரசின் இந்த நலத்திட்டத்தால் பயனடைய முடியாமல் தடுத்துள்ளது. 2014க்கு முன், மேற்கு வங்கத்தில், 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வந்தன. கடந்த 10 ஆண்டுகளில், இம்மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 26ஐ தொட்டு, கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன், கல்யாணி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நேற்று (மார்ச்.1) மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.