தமிழ்நாட்டின் இதயம் போன்றது திருச்சி - விமான நிலையத்துக்கு இணையான பேருந்து முனையம் அவசியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ரூ.408.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையையும் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து எல்லையில் போராடும் ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இது பஞ்சப்பூர் அல்ல, எல்லா ஊரையும் மிஞ்சப்போகிற மிஞ்சப்பூர் என்று தோன்றுகிறது. பேருந்து முனையத்தில் ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து நிலையம் அவசியம். இந்த பேருந்து நிலையத்தில் விமான நிலையத்திற்கு இணையான வசதிகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் திமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம்.
திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்ட வரலாறு திருச்சியில் தான் தொடங்கியது. 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடங்கியதும் முதல் பயணமே திருச்சி தான்.
திமுக ஆட்சியில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதற்கு சான்று பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றது தான். அதேபோல், மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது. மேலும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல் திருச்சியில் காமராஜர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.