திருச்சி | மணப்பாறை புனித லூர்து அன்னை ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்!
திருச்சி மணப்பாறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறித்துவ பேராலயமான புனித லூர்து அன்னை ஆலயத்தில் மறைவட்ட அதிபர் ம.தாமஸ் ஞானதுரை தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசு பிறந்த தினமான டிச. 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை குறிக்கும் வகையில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிர வைத்து, பண்டிகைக்கு தயாராகி வந்தனர். மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறித்துவ பேராலயமான புனித லூர்து அன்னை ஆலயத்தில் மறைவட்ட அதிபர் ம.தாமஸ் ஞானதுரை தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறக்கும் வேத பாடல் ஆலயத்தில் முழங்க ஏசு கிறிஸ்து பிறந்தது அறிவிக்கப்பட்டது.
அதேபோல், பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயம், மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோனியார் தேவாலயம், தீராம்பட்டி புனித வனத்து அந்தோனியார் தேவாலயம், மலையடிப்பட்டி புனித சவேரியார் தேவாலயம், கருங்குளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.