திருச்சியில் மீண்டும் அதிர்ச்சிச் சம்பவம்! ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்த பிரபாகரன் வெட்டிக்கொலை!
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்பு உடையவர் என சந்தேகிக்கப்படுபவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற போது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி திருச்சி-கல்லணை சாலையில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றனர்.
இக்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் கொலை நடந்து 13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இதுவரை ஒருவரை கூட காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 2012-ம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் 2017-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளைப் பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வள்ளுவன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என் பிரபாகரன் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி தென்னூர் அருகே உள்ள ஆஃபீஸர்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் பிரபு
என்கிற பிரபாகரன் (51). இவர் ஆம்புலன்ஸ் வாடகைக்கு கொடுப்பது ஒப்பந்த
அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு அனுப்புவது ஆகிய தொழில்களை செய்து வந்தார். இவருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
பிரபு மீது உறையூர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை காவல் நிலையம் உள்ளிட்ட
காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் பல்வேறு வழக்குகள்
நிலுவையில் உள்ளன. அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசால் சரித்திர பதிவேடு
குற்றவாளியாகவும் பிரபு உள்ளார். இவர் நேற்று இரவு அரசு மருத்துவமனை எதிரே
உள்ள தன்னுடைய அலுவலகமான ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் ஆபிஸில்
இருந்துள்ளார். அப்பொழுது இரவு சுமார் 9.30 மணியளவில் அவர் அலுவலகத்திற்குள்
பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், முகமூடியுடன் நுழைந்த 3
பேர் கொண்ட கும்பல் பிரபுவை சரமாரியாக தலையில் வெட்டி உள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேகரிக்கப்பட்டது.
மேலும் மோப்பநாய் காவேரி கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டுச் சென்ற துண்டை மோப்பம் பிடித்தது. காவிரி அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம்
ஓடி நின்றது. கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முக்கிய பகுதியில் நடந்த கொலை சம்பவம் திருச்சியில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் கே. என் நேருவின் தம்பி சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வளையத்திற்குள் இருந்த பிரபுவை மீண்டும் இன்று விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.