தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு கோவையில் அஞ்சலி ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக தேஜஸ் விமானமானது கீழே விழுந்து நொறுங்கி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி நமன்ஷ் சியால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேஜஸ் விமான விபத்து தொடர்பாக காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தவிட்டுள்ளது.
இமாசலபிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விமானி நமன்ஷ் சியால் கோவை சூலூரில் உள்ள விமான சாகச படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரது உடல் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம். அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்கு தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தைரியம் என்றும் அழியாது”
என்று பதிவிட்டுள்ளார்.