விரைவில் எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை - சோதனை ஓட்டம் வெற்றி!
வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை எழும்பூர் நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூர், சென்னை-கோவை, சென்னை- திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசர்கோடு, சென்னை-விஜயவாடா மற்றும் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சென்னை எழும்பூர்- நாகர்கோவில் மற்றும் மதுரை- பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த இரு மார்க்கத்திலும் வந்தேபாரத் ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு குறித்த நேரத்தில் அங்கு சென்றடைந்தது. மறுமார்க்கமாக இந்த ரயில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
இந்த ரயில் எழும்பூரிலிருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடைந்தது. ஏற்கெனவே, இந்த வழித்தடத்தில் 2 சிறப்பு வந்தே பாரத் வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நிரந்தரமாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.
இதற்கிடையே, மதுரையிலிருந்து நேற்று காலை 5.15 மணிக்குபுறப்பட்ட மற்றொரு வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.15 மணிக்கு பெங்களூரு சென்றது. மறுமார்க்கமாக இந்த ரயில் பிற்பகல் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு மதுரை சென்றடைந்தது.இந்த ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு சென்றடைந்தது. இரண்டு ரயில்களின் சோதனை ஓட்டமும் வெற்றிக்கரமாக நடந்து முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.