போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் | வெறிச்சோடிய கொடைரோடு சுங்கச்சாவடி!
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலன பேருந்துகள் இயக்கப்படாததால் கொடைரோடு சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதையும் படியுங்கள்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் | அவர்கள் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கைகள் என்னென்ன?…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் மதுரை-திண்டுக்கல் மார்க்கமாக நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்து செல்லும். இந்த நிலையில், பேருந்துகள் ஏதும் ஓடாமல் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தனியார் மற்றும் நெடுந்தொலைவில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. இதனால் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.