போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் | பாதுகாப்பு பணியில் 21 ஆயிரம் போலீசார்...!
அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 21 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பணிமனையிலிருந்து பேருந்துகளை இயக்கும்போது தடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.