”ஆளுநர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா’ என்னும் தலைப்பில் கல்வியாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது, “கலை நிகழ்ச்சி வழியாகவும் பாராட்டு வழியாகவும் நீங்கள் புகழ்ந்த அன்பினால் நான் திக்குமுக்கு ஆகிவிட்டேன். உங்கள் அன்புக்கும் நம்பிக்கை இருக்கும் என்று நான் தகுதிப்படுத்தி, இன்னும் தகுதியாக உழைப்பேன். 'மாநில சுயாட்சி நாயகர்' என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது நானில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான். ஸ்டாலின் அமைக்கும் ஆட்சி, சமூகநீதி, சமத்துவ ஆட்சியாக இருக்கும், மாநில சுயாட்சிக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையுடன் திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது எனக்கு மட்டுமல்ல அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும்தான். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் வழியாக தமிழ்நாடு வெற்றியை வாங்கி தந்துள்ளது. இங்கு நிறைய மாணவர்கள் உள்ளனர். நாளைய தலைவர்கள் அவர்கள். நீங்களே யோசியுங்கள், முதலமைச்சராகி மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால், மத்திய அரசின் ஏஜன்டாக இங்கு தற்காலிகமாக இருக்கும் ஆளுநர் அதை தடுத்து நிறுத்த முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? தேர்தல் எதற்கு நடத்த வேண்டும். ஆளுநர் பதவி என்பது எந்த பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட் . மாணவர்களுக்கு எல்லா உதவியும் செய்து தருவது மாநில அரசுதான்.
யாராவது பாராட்டு விழா என்று சொன்னால் நான் டைம் கொடுக்க மாட்டேன். ஆனால், இந்த விழாவிற்கு நான் சரி சொன்னதற்கு உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க நீதிதான் அது எனக்கு அல்ல ஒட்டுமொத்த மக்களுக்கு கிடைத்த வெற்றி. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களும் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களுக்கும் உச்ச நீதிமன்றம் பெற்று தந்திருக்கக்கூடிய வெற்றி.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் முக்கியமாக சொல்லி இருப்பது மசோதாவை நிறைவேற்று வேண்டும் என்றால் 3 மாதத்துக்குள் மாநில அரசுக்கு சொல்ல வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மக்கள் தேர்ந்தெடுக்கப்படுத்த கூடிய அரசுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு கல்லில் பல மாங்காக்கள் அடித்து இருக்கிறோம். இந்த தீர்ப்பு வந்ததும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக அரசாங்கம் எந்த காலத்திலும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா? நாளை இதே ஆளுநர் இடத்தில் வேறு யாராவது வந்து அவர்களும் இதை செயல்பாடுகள் செய்தால் இதையும் எதிர்க்க தான் போகிறோம். எங்களது உரிமையை எந்த காலத்தில் விட்டு தரப்போவதில்லை இதுவே எங்களது பாலிசி.
என்னை பொறுத்தவரை இதே ஆளுநர் தொடர வேண்டும் அவ்வாறு தொடர்ந்தால் தான் திமுகவுக்கு வெற்றி. இந்தியாவில் இருக்கக்கூடிய 100 கல்லூரிகளில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பாருங்கள் ஐந்தில் ஒரு கல்லூரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. உலகத்துடன் போட்டி போட வேண்டும். அதற்கு இளைஞர்கள் இன்னும் வளர்ந்தாக வேண்டும். திமுக அரசு இளைஞர்களுக்கான அரசாகும்.கிராமப்புறம் மாணவர்களுக்கு திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். கல்வி நிலையங்களில் சயின்டிஸ்ட்பிக் மற்றும் சோசியல் ஜஸ்டிஸ் கருத்துக்கள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். மூடநம்பிக்கைகள் அழிக்கப்படும். உங்கள் ரோல் மாடல்களை சோசியல் மீடியாவில் நீங்கள் தேடாதீர்கள். கல்விகளின் தமிழ்நாட்டு மாணவர்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். நாம் இன்னும் அடைய வேண்டிய வளர்ச்சியை நோக்கி நடைபோட வேண்டும் என்ன தடைகள் வந்தாலும் அதை முறியடித்து உங்களை நாங்கள் படிக்க வைப்போம். மாணவர்களையும் மாணவிகளையும் படிக்க வைப்பது அரசின் கடமையாகும். உங்களுக்கு எப்பவுமே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி உங்கள் கூட துணை நிற்கும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.