போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன.
சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. இதையடுத்து சென்னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராக வேண்டும் என்று போக்குவரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.