துபாயில் வெளியாகிறது 'அயலான்' திரைப்படத்தின் டிரைலர்!
ரவிக்குமாா் இயக்கத்தில் உருவான அயலான் திரைப்படத்தின் டிரைலர் துபாயில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. 'அயலான்' அவரது 2வது படம்.
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையும் படியுங்கள் : கிறிஸ்துமஸ் பண்டிகை: 18 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 வடிவிலான கேக்!
'அயலான்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலான, ‘அயலா அயலா’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நரேஷ் ஐயர், ஹிருதி கட்டானி பாடிய இப்பாடலை விவேக் எழுதியிருக்கிறார். இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் இசை வெளியீடு விழா டிசம்பர் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜனவரி மாதத்தில் 'அயலான்' திரைப்படத்தின் டிரைலர் துபாயில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.