தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் !
தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல இடங்களில் புகை மூட்டத்துடன் காணப்பட்டது.
பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.
போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் காற்று மாசு ஏற்பட்ட நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்ததால் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
போகி பண்டிகை எதிரொலியாக, சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால், பனியுடன் புகையும் கலந்து புகைமூட்டமாக உள்ளது. கடும் புகை மூட்டம் காணப்படுவதால், சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும், புகைமூட்டம் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.