பட்டா வழங்கும் நிகழ்விலிருந்து பாதியில் சென்ற டி ஆர் பாலு; அமைச்சர்கள் இடையே சலசலப்பு!
சென்னை அம்பத்தூரில் இன்று 6000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், திமுக பொருளாளரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு பாதியில் கிளம்பிச் சென்றது அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டா வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் படி, இன்று அம்பத்தூர் ராமசாமி மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 6007 பயனாளர்களுக்கு பட்டா வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 1200 பேருக்கு இன்று பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கினர்.
நிகழ்ச்சி தொடங்கிய பிறகு, திமுக பொருளாளரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு திடீரென நிகழ்விடத்திற்கு வந்தார். அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் காரம்பாக்கம் கணபதி ஆகியோர் எழுந்து சென்று அவரை வரவேற்றனர். மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் டி.ஆர். பாலு மேடையை நெருங்கியதும் எழுந்து நின்று, மேடையின் நடுவே இருந்த நாற்காலியில் அமர அழைத்தனர். ஆனால், அதை மறுத்த டி.ஆர். பாலு, இருக்கையின் ஓரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அருகே அமர்ந்துகொண்டார்.
பின்னர், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி ஆகியோர் மீண்டும் எழுந்து வந்து டி.ஆர். பாலுவை அழைத்து, மேடையில் அமைக்கப்பட்டிருந்த நடு இருக்கையில் அமர வைத்தனர். இருப்பினும், நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே டி.ஆர். பாலு திடீரென பாதியிலேயே எழுந்து சென்றார். இந்த நிகழ்வு அமைச்சர்கள் மத்தியில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டலக் குழு மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.