டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று - வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணிக்கு 197 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயத்துள்ளது.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்றைய போட்டியில் இந்தியா அணியும், வங்கதேசம் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதையும் படியுங்கள் : “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்!” – நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை!
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். ஒரு சிக்கர், 3 பவுண்டரி விளாசி கேப்டன் ரோஹித் சர்மா 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 3 சிக்கருடன் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 36 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களும், ஷிவம் துபே 34 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அதன்படி, வங்கதேசம் அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.