கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்வு...கிலோ ரூ.60க்கு விற்பனை!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தை உள்ளது. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு கா்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்த சந்தைக்கு வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் சுமாா் 7,000 முதல் 8,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக 5000 டன் காய்கறிகள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைவால் காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை உயா்ந்தது.
தக்காளி வரத்து 1200 டன் என இருந்ததால், தக்காளி விலை மட்டும் உயராமல் இருந்தது. இந்த நிலையில், இன்று 700 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதன் காரணமாக தக்காளி விலையும் திடீரென உயா்ந்துள்ளது. அந்த வகையில், கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி, இன்று கிலோவுக்க ரூ.60 விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வு 10 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.