தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
தஞ்சாவூர் அருகே பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
"தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், ராமாபுரம் சரகம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் எட்டு திசைகளிலும் காவல்புரியும் அஷ்டசக்திகளுள் கீழ்திசையின்கண் புற்றுருவமாய் நின்று அருள்புரியும் சக்தி ஸ்தலம் என்றும், இக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு விழா 10.02.2025 (இன்று) நடைபெற உள்ளது.
இந்த திருக்குடமுழுக்கு விழாவை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 10.02.2025 (இன்று) தஞ்சாவூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.02.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக கருதப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.