#TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு உத்தேச விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2 A பணியிடங்கள் என்று 2,327 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20ம் தேதி வெளியிட்டது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7,93, 966 பேர் எழுதினர். இந்நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகள் சரியான விடை ( ✓) குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : நாட்டிலேயே முதல் முறையாக #kerala-வில் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி | பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை!
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும். தபால் வழியாகவோ, இ-மெயில் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. வருகிற 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும். பொது ஆங்கிலத்தில் வினா எண்கள் 177 முதல் 181 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள், வினா எண் 177 க்கு மேல கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும்"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.