நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு!
தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலை தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத்தவுள்ளனர். உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்கள் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி அறிவித்திருந்தது.
இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள். விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.