திருவள்ளூர் | பைக் மீது கார் மோதி விபத்து : 3 பேர் படுகாயம் - முறையாக விசாரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
திருவள்ளூரில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் திருத்தணி பகுதியில் ஒரு வங்கி அருகில் நபர் ஒருவர் தனது 2 பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று கார் ஒன்று வேகமாக வந்து அவர்களின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை கண்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கார் ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுக்கலாம் என்று பொது மக்கள் எண்ணினர். அப்போது அவர் பெரிய இடத்துப் பிள்ளை என்றும், மேலும் அவர் நகைக்கடை உரிமையாளர் என்றும் கூறப்படுவதால், போலீசார் கார் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அடிபட்டவர்களுக்கு பணம் வாங்கி கொடுத்துவிட்டு, சிகிச்சை முடிந்ததும் அவர்களை குடும்பத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஏன் முறையாக விசாரிக்கவில்லை என்று பொதுமக்கள் வினா எழுப்பினர். எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் என்று காவல்துறையினர் மூடி மறைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.