திருப்பூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!
திருப்பூர் கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பாதுகாப்பற்ற முறையில் 4 பேர் நேற்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் விஷவாயு தாக்கியதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரவணன், வேணுகோபால் என்ற இருவர் உயிரிழந்த நிலையில் ஹரி கிருஷ்ணன், சின்னசாமி என்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் ஹரி கிருஷ்ணன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் நவீன், அவரது தந்தை பாலசுப்பிரமணியம், பொது மேலாளர் தனபால், லாரி ஓட்டுநர் சின்னசாமி ஆகியோர் மீது பல்லடம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் வழங்க ஆலயா சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.