For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Tirupati | நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம் - ஏற்பாடுகள் தீவிரம்!

08:17 AM Oct 03, 2024 IST | Web Editor
 tirupati   நாளை தொடங்கும் திருப்பதி பிரம்மோற்சவம்   ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்க உள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவை கண் கவரும் விதத்தில் உள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்பதியில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், தேவஸ்தான நிர்வாகஅலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச்சாலைகளிலும், திருச்சானூர்-திருப்பதி சாலை, சித்தூர்-திருப்பதி சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், அலிபிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை, நடைபாதை, திருமலையில் மாட வீதிகள், கோயில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்கார தோரணங்கள், கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி, திருமலை மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. ஆந்திர அரசு சார்பில் நாளை (அக். 4) முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி, இன்று அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிடுவார். அன்று மாலை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளனர். பின்னர், பிரம்மோற்சவத்தின் முதல்நாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவிற்கு 5,140 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement