For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் | குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

06:57 AM Nov 07, 2024 IST | Web Editor
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்   குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.

Advertisement

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் ஆவணி திருவிழா, மாசித் திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா என பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில், மிக முக்கியமானதாக கந்த சஷ்டி விழா கருதப்படுகிறது.

கந்த சஷ்டி விழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி. வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான இன்று (நவ.7) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற காலவேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளுகிறார்.

இதையும் படியுங்கள் : 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

அங்கு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வதம் செய்கிறார் ஜெயந்திநாதர். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரகணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

10க்கும் மேற்பட்ட மாவடங்களில் இருந்து 4,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 250 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 20 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மார்க்கங்களில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement