திருச்செந்தூர் மாசித் திருவிழா: வெள்ளி சப்பரத்தில் அருள்பாலித்த சண்முகர்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத்திருவிழாவிழாவில் நாள்தோறும் முருகரும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
அந்த வகையில் 8ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி எட்டு வீதியிலும் உலா வந்து மேல் கோவியில்சேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேல் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பிறகு பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால்
அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா
வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வரும் 23-ஆம் தேதி நடக்கிறது.