காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்களை தேடும் பணி தீவிரம் - ஒருவர் உடல் மீட்பு!
திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி கண்டோன்மென்ட் அரசு உதவி பெறும் தனியார் (ஆர்சி) மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 10க்கு மேற்பட்ட மாணவர்கள், நேற்று அரையாண்டு இறுதித் தேர்வு முடிந்ததையடுத்து மதியம் ஒரு மணி அளவில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்பொழுது ஜாகிர் உசேன், விக்னேஷ் மற்றும் சிம்பு மூவரும் தெர்மாகோலை நீரில் விட்டு அதனை பிடித்து நீச்சல் அடித்துள்ளனர்.
அப்போது தெர்மாகோல் அட்டை துண்டு துண்டாக உடைந்துள்ளது. இதனால் பிடிமானத்தை இழந்த மூவரும் நீரில் மூழ்கி தத்தளிக்க ஆரம்பித்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் கத்தியுள்ளனர். அதைக்கேட்ட அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடோடி வந்து, மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாவட்ட அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில், உதவி மாவட்ட அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீயணைப்பு படை வீரர்கள் நீருக்குள் மூழ்கி தேடிய போது, ஆற்றுக்குள் முதலைகள் தென்பட்டன. இதனால் நீரில் மூழ்கி தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இன்று காலை 6 மணிக்கு தேடுதல் பணியை தொடங்கினர். அப்போது நீரில் மூழ்கிய மாணவர்களில் ஒருவரான ஜாகிர் உசேன் சடமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் மேலும் இரண்டு மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.