லஞ்சம் வாங்கியதாக குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கைது!
சென்னையை அடுத்த குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நிலம் வரன்முறைப்படுத்த ரூபாய் 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நிலத்தை வரன்முறை செய்ய லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்து நிலம் வரன்முறை ஆவணம் தருமாறு கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் 24 ஆயிரம் லஞ்ச பணத்தை நகராட்சி கமிஷ்னர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி மற்றும் அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகியோர் வாங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரி கலைசெல்வன் தலைமையிலான போலீசார் அந்த மூவரையும் கைது செய்தனர்.
இதனை அடுத்து குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்திலும் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி கமிஷனர் குமாரி, பாலசுப்பிரமணி, சாம்சன் ஆகிய மூவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.