திருப்பூரில் சாய ஆலை விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் - ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!
திருப்பூர் கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பாதுகாப்பற்ற முறையில் 4 பேர் நேற்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் விஷவாயு தாக்கியதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரவணன், வேணுகோபால் என்ற இருவர் உயிரிழந்த நிலையில் ஹரி கிருஷ்ணன், சின்னசாமி என்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் ஹரி கிருஷ்ணன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் நவீன், அவரது தந்தை பாலசுப்பிரமணியம், பொது மேலாளர் தனபால், லாரி ஓட்டுநர் சின்னசாமி ஆகியோர் மீது பல்லடம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கவனக்குறைவாக இருந்து உயிர் இழப்பு ஏற்படுதல், மனிதக் கழிவுகளை மனிதனை விட்டு அள்ளியது, மனித கழிவுகளை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை வைத்து அள்ளியது என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.