கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது - சங்கர் ஜிவால் பேட்டி!
சென்னை காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் கலந்தாய்வுக் கூடத்தில் பயங்கரவாதம் தடுப்பு படைகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதை குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "நவம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினை (ATS) ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் மூலம் பல ஆண்டுகால நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரிக்க தொடங்கியுளோம். குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்வதற்கு இரு பிரிவுகள் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில காவல்துறை உதவியுடன், அதேபோன்று கர்நாடக மாநில காவல்துறை உதவியுடனும், மத்திய ஏஜென்சி உதவியுடனும் தமிழக காவல்துறை தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சித்திக், அபூபக்கர், முகமது அலி மூவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு இருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மூவரும் தங்கள் அடையாளங்களை மாற்றி உலா வந்த நிலையில், ஒவ்வொருவரும் சுய தொழில் செய்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் வெளிநாடு சென்றார்களா, அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற இருப்பதாகவும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
181 சிறப்பு விரிவான பயங்கரவாத தடுப்பு பிரிவு சேர்ந்த அனைவரின் முயற்சியாலும், புதிய தொழில்நுட்பம் கொண்டும் பல வருடங்களாக தேடப்படும் தீவிரவாதிகளை கைது செய்யும் முயற்சி ஒரு சிறந்த வெற்றியை அளித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.