காசி சங்கமத்துக்கு ரயிலில் சென்ற தமிழக கலைஞர்கள்... அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!
தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடா்புகளை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று (பிப்.15) முதல் பிப். 24ம் தேதி வரை வாரணாசியில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து கடந்த 13ஆம் தேதி 700 நாட்டுப்புற கலைஞர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் புறப்பட்டனர். இந்த ரயில் நாக்பூர் சென்றபோது அங்கு வந்த முன்பதிவில்லா வட மாநிலத்தவர்கள் ரயிலில் ஏற முற்பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு கலைஞர்களுக்கும் அத்துமீறி பெட்டியில் நுழைய நினைத்த வட மாநிலத்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று (பிப்.14) நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக தென்னக பண்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டு கலைஞர்கள் பேருந்து மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து இன்னும் இரண்டு பிரிவுகளாக நாட்டுப்புற கலைஞர்கள், நிகழ்ச்சிக்கு செல்லவிருக்கும் நிலையில், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்திற்கான சென்னை சென்ட்ரல் - பனாரஸ் சிறப்பு ரயில் சேவையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.