அச்சுறுத்தும் #NipahVirus... கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!
மலப்புரத்தில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் மலப்புரம் பகுதியில் 24 வயது இளைஞர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
இந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 267 பேரில், அறிகுறியின் அடிப்படையில் 6 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் இரண்டு 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2 பேரும் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் மேலும் சில மாதரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்து, நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.