மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து கோரி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமானது சட்டசபையை கொண்டது. ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை கிடையாது என மத்திய பாஜக அரசு அறிவித்தது.
இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழுமையாக தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி லே, கார்கில் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நேற்று (பிப். 03) நடைபெற்றது. லடாக் தனி மாநில அந்தஸ்து வழங்க கோரி லே, கார்கில் மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.
இது தொடர்பாக லடாக் போராட்ட குழுவினர் கூறுகையில், “எங்களுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். லடாக் மாநிலத்துக்கு சட்டசபையை உருவாக்க வேண்டும். லடாக் தனி மாநிலத்தை பழங்குடிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அரசியல் சாசனத்தின் 6வது பிரிவில் இணைக்க வேண்டும். அத்துடன் லே, கார்கில் ஆகிய மாவட்டங்களை 2 மக்களவை தொகுதிகளாகவும் அறிவித்து மக்களவையிலும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியே முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது” என தெரிவித்தனர்.
லே-வில் உள்ள போலோ மைதானத்தில் கடும் குளிர், உறைபனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் லடாக் தனி மாநில அந்தஸ்து கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் லே சலோ என முழக்கமிட்டனர். சிலர் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் மாநில அந்தஸ்து கோரி முழக்கங்களை எழுப்பினர்.