Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ராகுல் காந்தி 5-ஆவது வரிசையில் அமர்ந்தாலும்; 50-ஆவது வரிசையில் அமர்ந்தாலும் மக்களின் தலைவராகவே இருப்பார்!” - காங்கிரஸ்

09:18 PM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு ஐந்தாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில், அவர் ஐந்தாவது வரிசையில் அமர்ந்தாலும் சரி அல்லது ஐம்பதாவது வரிசையில் அமர்ந்திருந்தாலும் சரி; அவர், எப்போதும் மக்களுக்கு ஒரு தலைவராகவே இருப்பார் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஐந்தாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா இன்று (15.08.2024) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி 11-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கும் முடிவுடன், முன்னுரிமை அட்டவணையின்படி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் இருக்கை குறித்த நிகழ்வுக்கு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரீயா ஸ்ரீனேட் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரீயா ஸ்ரீனேட் கூறியதாவது:

சிறிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து பெருந்தன்மையான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. சுதந்திர தின நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தியை ஐந்தாவது வரிசையில் நிறுத்த, மோடியின் முடிவு அவரது விரக்தியைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு ஜனநாயகம், ஜனநாயக மரபுகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மீதான மரியாதை இல்லாமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிகழ்ச்சி ஒலிம்பிக் வீரர்களைக் கௌரவிக்கும் நோக்கம் கொண்டதால் ராகுலுக்கு கடைசி இருக்கை அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் போன்ற முக்கிய தலைவர்களுக்கு மட்டும் எப்படி முன் வரிசையில் இருக்கை கிடைத்தது? எதிர்க்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியையே வகிக்கிறார். பொதுப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆனால், அற்ப மனப்பான்மை கொண்டவர்கள் ஜனநாயகம் மற்றும் அதன் மரபுகளை புறக்கணிக்கிறார்கள்.

ராகுல் காந்தி ஐந்தாவது வரிசையில் அமர்ந்தாலும் சரி அல்லது ஐம்பதாவது வரிசையில் அமர்ந்திருந்தாலும் சரி; அவர், எப்போதும் மக்களுக்கு ஒரு தலைவராகவே இருப்பார். ஆனால், நீங்கள் எப்போது இந்த மாதிரியான செயல்களை நிறுத்தப் போகிறீர்கள்? என்று சுப்ரீயா ஸ்ரீனேட்  கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் ஐந்தாவது வரிசையிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
78th Independence DayCongressIndependence Daynews7 tamilNews7 Tamil UpdatesRahul gandhi
Advertisement
Next Article