ஜிஎஸ்டியால் இழப்பு ஏற்படுபவர்களுக்கு வரியின் பாதிப்பு தெரியும் - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
”தமிழக அரசின் தொல்லியல் துறையின் காலம் என்பது எழுச்சிமிகு காலமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிலம் மற்றும் நதிக்கரைகளில் அகழாய்வு நடைபெற்று உள்ளது. கடலுக்கடியில் பழைய பூம்புகார் அகழாய்வு என்பது நம்முடைய பெருங்கனவு. 1970 ல் ஒன்றிய அரசு பூம்புகாரில் கடலுக்கடியில் ஆய்வு மேற்கொண்டதில் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது. கடலுக்கு அடியில் அகழாய்வு மேற்கொள்வது தமிழக தொழில் துறையில் ஒரு மைல் கல்லாக வழங்குகிறது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்த புரட்சியை 8 ஆண்டுகளாக ஒழித்துக்கட்டியது யார்? சீர்திருத்த புரட்சியை மோடியும், ஒன்றிய அரசும் நடத்த விடாமல் செய்தனர். ஜிஎஸ்டி வரி உயர்வின் போது பிரதமரும் ஒன்றிய நிதி அமைச்சரும் வரி உயர்வுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவின்படி வரி உயர்வு செய்யப்படுகிறது என கூறினார்கள்.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் போது இதில் கவுன்சிலுக்கு சம்பந்தமில்லை, இதற்கு பிரதமருக்கும், ஒன்றிய அரசுக்கும் சம்பந்தம் உள்ளது எனக்கூறுவது எந்த வகையில் நியாயம். 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியால் வணிகர்களை தூங்க விடாமல் செய்தது ஏன்? ஜிஎஸ்டி வரியால் இழப்பு ஏற்படுபவர்களுக்கு வரியின் பாதிப்பு குறித்து தெரியும். ஜிஎஸ்டி வரியால் இழப்பு ஏற்படாமல் சம்பாதிப்பவர்களுக்கு அதன் பாதிப்புகள் தாமதமாகத் தான் புரியும்.
4 அடுக்கு ஜிஎஸ்டி வரி மிகப் பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என 8 ஆண்டுகளாக கூறுகிறோம். அதை யாரும் கேட்கவில்லை. ஜிஎஸ்டி வரி உயர்வின் பாதிப்புகளை ஒன்றிய அரசு தற்போது தான் உணர்வதைப் போல பேசுகிறது. ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது. மாநிலங்களின் பெரும் வருவாய் ஜிஎஸ்டி வரியை நம்பியே உள்ளது, ஒன்றிய அரசு 30 சதவீத ஜிஎஸ்டி வரியை மட்டுமே நம்பியுள்ளது. ஒன்றிய அரசிற்கு இறக்குமதி வரி, வருமான வரி என பல்வேறு வகையில் வருவாய் என வருகிறது.
ஒன்றிய அரசு வரி வருவாயை பெருக்க கார்ப்ரேட் வரி, செல்வ வரி விதிக்கப்பட வேண்டும். மோடி தனது நண்பர்களே காப்பாற்ற கார்ப்பரேட் வரி செல்வ வரியை விதிப்பதில்லை.
தமிழக வரலாற்றின் தத்துவத்தை ஆன்மீக நம்பிக்கையாக மாற்றுவது தான் பாஜகவின் வேலையாக உள்ளது. தமிழக வரலாற்றை அழித்து புராணத்தை நிலை நிறுத்துவது மூலம் தமிழர்களின் வரலாறு, தமிழ் மரபு வரலாறு, தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக பாஜக 365 நாட்களும் வேலை செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.