தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம்! - இபிஎஸ் பேட்டி
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
“தமிழ்நாட்டு உரிமைகளை பெற்று தர மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் பாடுபடுவோம். இன்று முதல் இரவு, பகல் பாராமல் மக்களை சந்தித்து இரட்டை இலையை வெற்றியடைய செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிப்போம்.
திமுக அரசின் செயல்பாடுகள் இன்று மோசமாக உள்ளது. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16,619 கேள்விகள் எழுப்பினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9,695 கேள்வி தான் எழுப்பி உள்ளனர். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்தால் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். கேலோ விளையாட்டு போட்டிக்கு பிரதமர் மோடி வந்தார். அப்போது Go back Modi என்றவர்கள், இப்போது welcome Modi என்கிறார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.