“அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்துள்ளார்கள்” - செல்வப்பெருந்தகை!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் படுதோல்வி அடைந்த கூட்டம், இப்பொழுது ஆறுபடை
வீட்டின் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்களது களங்கத்தை செய்ய
ஆரம்பித்திருக்கிறது.
திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு வெளியில் இருந்து மக்களை
கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக பாஜக இந்த பிரச்சனையை கையில்
எடுத்துள்ளது. இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் ஆலயத்திலும் தர்காவிலும் வழிபாடு செய்ய உள்ளோம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டு
கொண்டிருக்கிறது. தொழிற்சாலை உற்பத்தி, உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு
ஏற்றுமதி, கல்வித்துறையில் புரட்சி, உள்ளிட்டவைகளை கெடுப்பதற்கு
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் பாஜக-வின் துணையோடு தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும். அரசியல் என்பது வேறு, ஆன்மீகம் என்பது வேறு. அரசியலை ஆன்மீகத்தில் கலக்கக்கூடாது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தயவு தாட்சனையும் காட்ட வேண்டாம்.
ஏற்கனவே பாஜக தலைவராக இருந்த முருகன் வேலை கையில் எடுத்து அரசியல் செய்தார். ஆனால் அது எடுபடவில்லை. இறைவன் முருகனிடம் உங்களது அரசியல் எடுபடாது. இறைவன் முருகன் அவர்களை அனுமதிக்க மாட்டார். திருப்பரங்குன்றத்தின் எம்.எல்.ஏ.,ஆக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியும் கையாளுகிறார்கள். இவர்களை ஒருபோதும் ஆறுபடை வீட்டின் முதல் படை வீடான திருப்பரங்குன்ற முருகன் அனுமதிக்க மாட்டார்.
எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் காலம் காலமாக இஸ்லாமியர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள நாச்சியாரை யார் வைத்தது. அதை எதிர்த்து இவர்கள் போராட முடியுமா? சிக்கந்தர் பாதுஷா எதிர்த்து போராடும் நீங்கள் ஏன் நாச்சியாருக்கு எதிர்த்து போர் கொடி தூக்க மறுக்கிறீர்கள்?
புதிய கல்வித் திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுத்ததால் தான் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. அப்படி இருக்க பாஜகவுடன் திமுக இணக்கமாக இருக்கிறது என்று எப்படி கூற முடியும்?. பாஜக ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் எத்தனை குட்டு வைத்தாலும் திருந்துவதாக இல்லை. ஆளுநர் பிடிவாதமாக இருக்கப் போகிறாரா? அல்லது அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் ஏற்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”. இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.