"டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானோர் தப்ப முடியாது" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
"டெல்லியில் நேற்று நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் தைரியத்தையும் அளிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன என்பதை எனது இந்திய மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
விசாரணையின் முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும். இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தப்ப முடியாது என்பதை நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். கார் வெடிப்புக்கு காரணமானோர் மீது கடும் தண்டனை வழங்கப்படும்"
இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.