For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள் – மினி விமர்சனம்!

இந்த வாரம் வெளியான 8 திரைப்படங்களின் விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:14 PM Sep 13, 2025 IST | Web Editor
இந்த வாரம் வெளியான 8 திரைப்படங்களின் விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள் – மினி விமர்சனம்
Advertisement

கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை என்றாலே திரையரங்குகள் புதுபடங்களால்  நிறையும். அந்த வகையில் இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ் நடித்த பிளாக்மெயில், அதர்வா நடித்த தணல், அர்ஜூன்தாஸ் நடித்த பாம் , பாண்டியன்ஸ்டோர் குமரன் நடித்த குமாரசம்பவம் மற்றும் லிங்கேஷ் நடித்த காயல், தேவ் நடித்த யோலோ கஜேஷ் நடித்த உருட்டு உருட்டு, தெலுங்கு டப்பிங் படமான மிராய் உள்ளிட்ட பல படங்கள் வந்துள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ..

Advertisement

” பிளாக்மெயில் ”

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றூம் நடிகரான ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்துமாதவி நடித்த படம் பிளாக்மெயில். கோவையில் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் வாகனத்தில் இருந்த போதைப்பொருள் திருடு போக, அதை கண்டுபிடித்து கொடு, இல்லைன்னா 50 லட்சம் பணத்தை கொடு. அப்புறம் உன் காதலியை மீண்டுகொண்டு போ என்று மிரட்டுகிறார் ஓனரான வேட்டை முத்துக்குமார். பணத்துக்காக ஸ்ரீகாந்த், பிந்துமாதவி தம்பதியின் குழந்தையை கடத்த பிளான் போடுகிறார். ஆனால், இன்னொருவர்
குழந்தையை கடத்த, ஜி.வி.பிரகாஷ் மீது ஸ்ரீகாந்த் சந்தேகப்பட என்ன நடக்கிறது என்பது பிளாக்மெயில் கதை. கடைசியில் குழந்தை கிடைத்ததா? கடத்தியது யார்? என்ன காரணம்? ஜி.வி.பிரகாஷ் பிரச்னைகள் தீர்ந்தா? காதலியை மீட்டாரா என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ். திரில்லர் படம் என்றாலும், விறுவிறு திரைக்கதை, ஏகப்பட்ட டுவிஸ்ட், பல கேரக்டர்களின் மாறுபட்ட குணங்கள் காரணமாக பிளாக்மெயிலை ரசிக்க முடிகிறது. ஜி.வி. பிரகாஷ், குழந்தை அம்மாவாக வரும் பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் நடிப்பு நச். கடத்தல், பிளாக்மெயில், பணப்பிரச்னை, மனப்பிரச்னை என்று பல விஷயங்களை திரைக்கதையில் அழகாக சொல்கிறார் இயக்குனர் மு.மாறன். சாம்.சி.எஸ் பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது. கிளைமாக்ஸ் டச்சிங். சின்ன குறைகள் இருந்தாலும் குழந்தை கடத்தல், பிளாக்மெயில் சம்பந்தப்பட்ட இந்த படம்தான் இந்த வாரம் டாப்.

” தணல் ”

சென்னையில் இருக்கும் பிரபலமான பேங்குகளில் கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார் வில்லன் அஸ்வின். புதிதாக போலீஸ் வேலைக்கு சேர்ந்த அதர்வா அதை எப்படி முறியடிக்கிறார் என்பது தணல் படத்தின் ஒன்லைன். அஸ்வின் யார்? அவருக்கு போலீஸ் மீது ஏன் அவ்வளவு கோபம்? அவருக்கும் அதர்வாவுக்கும் என்ன பிரச்னை என்பதை ஒரு நாள் இரவில் நடக்கும் தணல் மூலமாக சொல்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா. போலீஸ் கான்ஸ்டபிளாக ஆக்ஷன் காட்சிகளிலும், அம்மாவை காப்பாற்ற போராடும் மகனாக சென்டிமென்ட் காட்சிகளிலும், லாவண்யா திரிபாதி காதலனாக ரொமான்சிலும் நன்றாக நடித்து இருக்கிறார் அதர்வா. வில்லனாக வரும் அஸ்வின் பாதி ஹீரோ மாதிரி இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளில், அவரின் கோபம், செயல்பாடுகள் புதிது. ஒரு பெரிய குடிசைபகுதியில் பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது. அதை அழகாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திசரவணன். வில்லன், போலீஸ் சேசிங், சண்டை காட்சிகள், கிளைமாக்ஸ், தணல் சம்பந்தப்பட்ட காட்சிகள் தணலை பார்க்க வைக்கிறது. ஆனாலும், பழிவாங்க வில்லன் சொல்லும் காரணங்கள் அழுத்தமாக சொல்லப்படவில்லை. சம்பந்தம் இல்லாமல் அப்பாவி போலீசை பழிவாங்க நினைப்பது சரியா என்ற கேள்வி படத்துக்கு மைனஸ். ஆனாலும், வித்தியாசமான திரைக்கதை, மேக்கிங், நடிப்புக்காக தணலை பார்க்கலாம்

” பாம் “

விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், காளிவெங்கட், ஷிவாத்மிகா, சிங்கம்புலி நடித்த கிராமத்து பின்னணியிலான கதை. சாதி பிரச்னையால் இரண்டு கிராமங்கள் மோதிக்கொண்டிருக்கிற திடீரென இறக்கிறார் காளிவெங்கட். அவர் பிணத்தை வைத்தும் சாதி சண்டைபோடுகிறார்கள். காளிவெங்கட் பின்னால் இருக்கும் கடவுள் எந்த சாதிக்கானவர் என்று மோதுகிறார்கள். இரண்டு தரப்பு மக்களை எப்படி ஒற்றுமையாக்குகிறார் ஹீரோ அர்ஜூன்தாஸ் என்பது பாம் கதை. பிணமான பின்னரும்,சில உடல், வேதியியல் பிரச்னைகளால் பாம் போடுகிறார் காளிவெங்கட். அவரை இயக்குவது தங்கள் கடவுள் என்று இரண்டு தரப்பு மோதுகிற கான்செப்ட் புதிதாக இருக்கிறது. கிராமத்தில் நடக்கும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள், கடவுள் பெயரால் மோதுவது, பிண அரசியல் என்று நகரும் பாம் கதைக்கு காளிவெங்கட்டும், அர்ஜூன்தாசும் உயிர் கொடுத்து இருக்கிறார்கள். வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் ஷிவாத்மிகாவும் மேக்கப், கவர்ச்சி இல்லாமல் நடிப்பில் முத்திரை பதித்துஇருக்கிறார். தீண்டாமையால் பாதிக்கப்பட்டவராக வரும் பூவையார் கேரக்டர் கலங்க வைக்கிறது. கலெக்டராக வருகிறார் அபிராமி. இடைவேளைக்குபின் கொஞ்சம் போரடித்தாலும் இது கிராமத்து கதைகளில், சாதி பிரச்னையை சொல்லும் கதைகளில் ரொம்பவே புதிது. அதை காமெடி, பேண்டசி, சாங்கியம் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

” குமார சம்பவம் “

சினிமாவில் டைரக்டர் ஆக ஆசைப்படும் ஹீரோ குமரன் வீட்டு மாடியில் குடியிருக்கிறார் சமூகஆர்வலான குமாரவேல். ஒருநாள் அவர் திடீரென இறந்துவிட போலீசார் குமரன் மீது சந்தேகப்படுகிறார்கள். அவரோ 3 பேர் மீது சந்தேகப்படுகிறார். குமாரவேல் இறந்தது எப்படி? குமரன் டைரக்டர் ஆனாரா என்பதை காமெடி கலந்து சொல்லும் படம் குமாரசம்பவம். இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கிறார். பாண்டியன்ஸ்டோர்ஸ் குமரன் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். நடிப்பிலும் குமரன் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். சமூகஆர்வலாக வரும் குமாரவேல், குமரன் தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார் நடிப்பு படத்துக்குபலம். இடைவேளைக்குபின் ஹீரோ, வினோத்சாகர், பாலசரவணன் இணைந்து அடிக்கும் காமெடி லுாட்டிகள் கலகலப்பு. குமாரவேல் கொலைகாரர்களை கண்டுபிடிக்கு இவர்கள் நடித்து சிபிஐ ஆபரேசன் சிரிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. முதற்பாதியை இன்னும் கமர்ஷியலாக சொல்லியிருந்தால் படம் பெரிய ஹிட்டாகி இருக்கும்

” காயல் “

எழுத்தாளர் தமயந்தி காயல் படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார். கதையும் விவாதத்துக்கு உரியது. காதல், ஜாதி, பெற்றோர்களின் மனநிலை, பெண்களின் நிலையை படம் பேசுகிறது. போலீஸ் அதிகாரி ஐசக், அனுமோல் தம்பதியினரின் மகளான காயத்ரி தற்கொலைக்கு எதிரான நிலைப்பாடு உடையவர். ஆனால், திருமணத்துக்குபின் தற்கொலை செய்கிறார். அந்த வலியால் கணவரை பிரிய நினைக்கிறார் அனுமோல். மகளின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க, ரமேஷ்திலக்குடன் இவர்கள் பயணம் ஆகிறார். அப்போது நடப்பது என்ன? மகளின் தற்கொலைக்கு யார் காரணம்? என்பதை விவரிக்கிறது கதை. பாசக்கார அப்பாவாக பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார் ஐசக். ஜாதி பாசத்தால் மகளை இழந்த கேரக்டரில் அனுமோலும் அழுத்தமான நடிப்பை தந்து இருக்கிறார். மகளாக வரும் காயத்ரி துறுதுறுவெவன இருக்கிறார். அவர் காதலனாக வரும் கபாலி லிங்கேஷ், ஐசக் குடும்ப நண்பராக வரும் ரமேஷ்திலக் கேரக்டரும், அவர்கள் வசனம், நடிப்பும் மனதில் நிற்கிறது. ஜாதி பிரச்னை, கணவன் மனைவி ஈகோ, காதல், அன்பு என பல விஷயங்களை நுட்பமாக கதை பேசுகிறது. ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் ஜாதி வெறி உண்டு. அதனாலும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற புது கோணமும், வசனங்களும், கடைசியில் அன்பால் அனைத்து மாறும் என்கிற மெசேஜ் காயலை பார்க்க வைக்கின்றன. வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இல்லாமல், பேச தயங்கும் விஷயத்தை பேசுவது சிறப்பு. கார்த்திக் கேமரா, ஜஸ்டின் இசை, தமயந்தி இயக்கம், எழுத்து ஆகியவை இந்த சமூக சிந்தனை படத்துக்கு பலமாக இருக்கின்றன

” யோலோ “

பெண்பார்க்க வந்தவர்கள் ஹீரோயினிடம் ‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே, ஹனிமூன் கூட போயிட்டு வந்தீங்களே’ என்று சொன்னால் எப்படி இருக்கும். அவர் என்ன செய்வார் என்பதை யோலோ படத்தின் கதை. இந்த டயலாக் கேட்டு மிரண்டு போகும் ஹீரோயின் தேவிகா சம்பந்தப்பட்ட பையனிடம் போய் நமக்கு திருமணம் ஆகிவிட்டதா.? என்று கேட்கிறார். இரண்டு பேய்கள் ஆசையால் அது நடந்தை அறிந்து பதறுகிறார்கள். சட்டப்படி விவகாரத்து வாங்க முயற்சிக்கிறார். அப்போது தேவ், தேவிகா காதலிக்க ஆரம்பிக்க, என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். சாம் இயக்க, புதுமுகங்கள் அதிகம் நடித்த படம், கலர்புல்லாக கதை நகர்கிறது. ஹீரோ, ஹீரோயின் அழகாக இருக்கிறார்கள்.ஆனால், திரைக்கதை, காட்சிகளில் பவர் இல்லை.அதனால், பல இடங்களில் படம் தடுமாறுகிறது. காதல் படமா? பேய் படமா? திரில்லர் படமா? என்ற குழப்பம் ஏற்படுகிறது. புதுவிதமான கரு, ஆனால், காமெடி, காதல், பேய் காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்து இருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும். தலைப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கிறது.

” உருட்டு உருட்டு “

குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் காதலன் கஜேசை (நாகேஷ்பேரன்) மாற்ற நினைக்கிறார் ஹீரோயின். அவரோ அதை தொடர, ஹீரோவை மாற்ற அதிரடியாக என்ன முடிவெடுத்தார் ஹீரோயின் ரித்விகா என்பதே உருட்டு உருட்டு படத்தின்  கதை. இப்படத்தை பாஸ்கர்சதாசிவம் இயக்கியுள்ளார். பலரின் சொத்துகளை போலி சான்றிதழ் தயாரித்து ஆட்டையை போடுகிறார் ஹீரோயின் தந்தை பத்மராஜூஜெய்சங்கர். ஊர் சுற்றி திரியும் ஹீரோவை காதலிக்கிறார் மகள். காதலை பிரிக்க நினைக்கிறார் தந்தை. மாமா மொட்டை ராஜேந்திரன் வீட்டுக்கு காதலனை அழைத்து செல்லும் ரித்விதா என்ன செய்கிறார். 3 பொண்டாட்டிகளுடன் வாழும் மொட்ட ராஜேந்திரன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஒரு மாதிரி செல்கிறது கதை. குடி பழக்கத்துக்கு ஆளான காதலனுக்கு ஹேீராயின் கொடுக்கும் தண்டனையும், மொட்டராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காமெடிகாட்சிகள் மட்டும் படத்தின் பலம்

” மிராய் ”

மாமன்னர் அசோகரின் அற்புத சக்தி கொண்ட ஒரு புத்தகத்தை அடைந்து, தனது சக்தியை அதிகரித்து உலகை தன் வசம் ஆக்க நினைக்கிறார் வில்லன் மனோஜ்மஞ்சு. மிராய் என்ற ராமரின் ஆயுதத்தை கண்டறிந்து அதைக்கொண்டு அவனை எப்படி தடுத்தார் ஹீரோ தேஜா என்பது படத்தின் கரு. ஹனுமான் படத்தில் கலக்கிய தேஜாவின் அடுத்த மித்தலாஜி சப்ஜெக்ட் படம் இது. கார்த்திக் இயக்கி உள்ளார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட், புராண கதை, காசி, ராமரின் ஆயுதம், அம்மா சென்டிமென்ட், ரயில் சண்டை, கருடன்,கிராபிக்ஸ் நிறைந்த பக்கா பேண்டசி படம். தமிழிலும் டப்பாகி உள்ளது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

Tags :
Advertisement