“சொந்த குடும்பத்தை உடைக்கும் ஒருவரை சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” - மீண்டும் #NCP-ல் இணையப் போகிறாரா அஜித் பவார்?
“தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன். எனது தவறை நான் உணர்ந்துவிட்டேன்” என அஜித் பவார் பேசியிருப்பது அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரத் பவாரின் அண்ணண் மகனான அஜித் பவார், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தற்போது பாஜக உள்ள மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். பாஜகவுடன் இணைந்ததையடுத்து மகாராஷ்டிர துணை முதலமைச்சர் பொறுப்பையும் வகித்து வருகிறார். கட்சியின் பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏக்கள் அஜீத் பவார் பக்கம் சென்றதால் அவரது தலைமையிலான பிரிவுக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்பட்டது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (பவார்)-சிவசேனை (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து தனது மனைவியை அஜித் பவார் நிறுத்தினார். ஆனால், தேர்தலில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார்.
பாஜக தோல்விக்கு தேசியவாத காங்கிரஸ் தான் காரணம் என பாஜக தரப்பு தெரிவித்து வந்த நிலையில், சுப்ரியா சுலேவை எதிர்த்து தன் மனைவியை நிறுத்தியது தவறு என அண்மையில் அஜித் பவார் பேசியிருந்தார். இந்நிலையில் மீண்டும் சொந்த குடும்பத்தை ஏற்பவர்களை சமூகம் ஏற்காது என பேசியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியதாவது;
அப்பாவைவிட மகளை யாரும் நேசிப்பதில்லை. உங்களை ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை. இப்போது நீங்கள் (பாக்யஸ்ரீ) உங்கள் சொந்த தந்தைக்கு எதிராக போராடத் தயாராகிவிட்டீர்கள். இது சரியா? நீங்கள் உங்கள் தந்தையை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக் கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன். எனது தவறை நான் உணர்ந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்யஸ்ரீ, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை குறிப்பிட்டே அஜித் பவார் பேசினார். சரத் பவார் கட்சியில் இணையவே அண்மை காலமாக அஜித் பவார் இவ்வாறு பேசி வருவதாக அரசியல் வட்டராங்கள் தெரிவித்து வருகின்றன.
அதே நேரத்தில், அஜீத் பவாரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை என்று சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது. 'தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் சகோதரியை (என்னைப்) பற்றி அவருக்கு நினைவு வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதை மறந்துவிட்டாரா' என்று சுப்ரியா சுலே பேசியது குறிப்பிடதக்கது.