"ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்த நிலையில் தொடர்ந்து போர் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் தெரிவித்தனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இந்தியா அறிவித்து இருந்தது.
இதனிடையே இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களின் பங்களிப்பு, தியாகத்திற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இங்கு இருக்கிறேன். எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது. இதுபோன்ற பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் உங்களுடன் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பாதாமி கண்டோன் மெண்டில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.