“பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு இதுவே சாட்சி” - சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு பற்றிய புதிய வீடியோ வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
சண்டிகர் மேயர் தேர்தலில், வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி திருத்தம் செய்வது தொடர்பான புதிய வீடியோவை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்த ஆண்டு ஜனவரி 18-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.
இதனிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹின் நோய்வாய்ப்பட்டுள்ளதால், தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் தேதியை ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 6-ம் தேதிக்கு சண்டிகர் துணை ஆணையர் ஒத்திவைத்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது கடந்த ஜன. 24-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜனவரி 30-ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.
35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!
இதனைத் தொடர்ந்து 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோவும் இணையத்தில் வெளியானது.
ਹੁਣ ਤਾਂ ਮੰਨ ਜਾਓ @BJP4India ਵਾਲਿਓ!
ਇਸਤੋਂ ਵੱਡਾ ਸਬੂਤ ਹੋਰ ਕੀ ਹੋ ਸਕਦੈ। ਦੇਖੋ ਕਿਵੇਂ BJP ਦੇ Presiding Officer ਨੇ ਸ਼ਰੇਆਮ ਖ਼ੁਦ ਹੀ ਵੋਟਾਂ ਕੈਂਸਲ ਕਰਕੇ ਉਡਾਈਆਂ ਲੋਕਤੰਤਰ ਦੀਆਂ ਧੱਜੀਆਂ।
ਇਹ ਭਾਜਪਾ ਦੀ ਤਾਨਾਸ਼ਾਹੀ ਦਾ ਜਿਉਂਦਾ ਜਾਗਦਾ ਸਬੂਤ ਹੈ।#ChandigarhMayor pic.twitter.com/BIxIhrwRv6
— AAP Punjab (@AAPPunjab) February 5, 2024
இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி, தனது X தள பக்கத்தில், சண்டிகர் மேயர் தேர்தலில், வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி திருத்தம் செய்யும் தெளிவான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “பாஜக இப்போதாவது ஒத்துக்கொள்ள வேண்டும். இதைவிட வேறென்ன பெரிய சாட்சி வேண்டும். வாக்குச்சீட்டில் திருத்தம் செய்து பாஜகவின் தேர்தல் அதிகாரி வெளிப்படையாக ஜனநாயகத்தை அழிப்பதை பாருங்கள். பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு இதுதான் சான்று” என்றும் பதிவிட்டுள்ளது.