தனுஷ் பட கதை இதுதான்... ஹிண்ட் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி!
தனுஷை வைத்து எடுக்கும் படமும் உண்மை சம்பவத்தை தழுவி இருக்கும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்.31 அன்று வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவம் ஆன, மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி அமரன் உருவாகியது. அமரன் படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55வது படத்தை இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தனுஷ் இயக்கிவரும் இட்லி கடை படத்தின் வேலைகள் முடிந்ததும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “அமரன் திரைப்படம் உண்மையான நாயகனான மேஜர் முகுந்த் வரதராஜனை பற்றியது. என் அடுத்தப்படமும் சமூகத்தில் அடையாளம் கிடைக்காமல்போன நாயகர்களின் கதையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், தனுஷுடனான படமும் உண்மை சம்பவத்தைத் தழுவி இருக்கலாம் எனத் தெரிகிறது.