விஜய் மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் - மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் தங்கர் பச்சான் பேட்டி!
தவெக தலைவர் விஜய் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழை நீர் பல்வேறு பகுதியில் தேங்கி நின்றதால் மக்கள் பெறும் அவதிபட்டனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த பகுதிகளான செம்மண்டலம், தாழங்குடா, கண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த இயக்குனர் தங்கர் பச்சான் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
“ மக்களின்வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள்தான். 2ஆயிரம், 6ஆயிரம் என எவ்வளவு நாள்தான் நிவாரணம் அளித்து மக்களை ஏமாற்ற போகிறீர்கள். அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயமானதாக இல்லை. ஆனால் அது மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. சேற்றை வாரி இறைத்தவர்கள் மண்ணில் உழைத்த விவசாயிகளகாகத் தான் இருப்பார்கள் “ என தங்கர் பச்சான் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் நலத்திட்ட உதவிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் என தெரிவித்தார்.