பெண்களை துரத்தியதற்கு காரணம் இதுதான்... போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் சென்ற காரை, நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் காரில் துரத்தி சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் முழுவிவரம் என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.24) அதிகாலை சுமார் 4 மணியளவில் ஈசிஆர் முட்டுகாடு படகு குழாம் மேம்பாலம் மீது, கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதர்காக காரை ஆண்கள் நிறுத்தியுள்ளனர். ஆண்கள் நிறுத்திய கார் பின்னால் புகார் அளித்த பெண்கள் காரை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் முதலில் அங்கிருந்து சென்ற பெண்கள் கார், முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞர்களின் காரை லேசாக உரசியதாக கூறப்படுகிறது. காரை உரசிவிட்டு ஒரு சாரி கூட கேட்கவில்லை என்பதால் அந்த காரை இளைஞர்கள் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் உள்ள கார் கிழக்கு கடற்கரை சாலையில் தங்களை வெகு தூரமாக துரத்துவதை பார்த்த பெண்கள் பெரும் அச்சத்தில் அவர்களது செல்போனில் அந்த காட்சியை வீடியோவாக பதிவிட்டபடியே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அந்த இளைஞர்களை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றனர். கேளம்பாக்கம் உதவி ஆணையாளர் வெங்கடேசன், கானத்தூர் ஆய்வாளர் முருகன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து காரில் இருந்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் காரை இடித்ததாக கூறுவது தவறான தகவல் என புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார். சாலை முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தால் உண்மை வெளிவரும் என பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.