"இது தான் இந்தியா ராணுவத்தின் முகம்" - ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாரேனும் உயிரிழந்துள்ளார்களா எந்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
இதனிடையே, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குததில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பளித்துள்ளார்.
#OperationSindoor
This is the face of the Indian Army
Jai Hind 🇮🇳🫡— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 7, 2025
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமரன் திரைப்பட வசனமான, “இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்” என்ற வரியைப் பதிவிட்டு ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோரும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளனர். அனிருத் "இந்திய ராணுவத்திற்கு சல்யூட் ஜெய் ஹிந்த்" என்றும் ஜிவி பிரகாஷ் "ஜெய் ஹிந்த் "என்றும் பதிவிட்டுள்ளனர்.