திருவண்ணாமலை தீப திருவிழா - கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (நவ.26) அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் கருவறையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதையும் படியுங்கள்:தோனியின் முடிவுகள் 99.9% சரியாக இருக்கும்: அம்பத்தி ராயுடு!
இதனை தொடர்ந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம்
வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதை காண தமிழ்நாடு மட்டுமல்லது உலகெங்கிலும் இருந்து 30 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். மேலும், கொட்டும் மழையையும் பாராமல் பக்தர்களுக்கு கிரிவலம் வருகின்றனர்.