ரூ.14,000 கடன் பிரச்னை | இரு குழந்தைகளைக் கொன்ற நண்பர் கைது #Ambur -ல் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டத்தில் சடலமாக இரு குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். மேலும், யுவராஜின் நண்பரான வசந்தகுமார் என்பவர், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று திண்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், வசந்தகுமார் நேற்று மாலை 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வசந்தகுமார் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்த்தின் செல்போனுக்கு யுவராஜ் அழைத்துள்ளார். அப்போது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த யுவராஜ், உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அனைத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கி மூலம் தகவலை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து காவல் துறையினரும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தன. இதில், காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : பிரதமர் #Modi அமெரிக்க பயணம் | உக்ரைன் முதல் காசா மோதல் வரையிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் - வெளியுறவு அமைச்சகம் தகவல்!
பின்னர், அங்கு சென்ற ஆம்பூர் போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், இரண்டு குழந்தைகளின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டதில் விவசாய நிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று இருப்பதாக கண்டறிந்தனர். போலீசார் அந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அங்குள்ள விவசாய நிலம் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் உதவியுடன் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
வசந்தகுமார் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், வசந்தகுமரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, வசந்தகுமார் மனைவியை பிரிந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், கோயில் அருகாமையில் சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல் கட்ட விசாரணையில் சிறுவரின் பெற்றோர்கள் வசந்த்குமார் இடம் ரூ. 14,000 பணம் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காததால் குழந்தைகளை கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் போலீசார் வசந்த் குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நண்பனின் இரண்டு ஆண் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.