திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் - எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருந்தார். அப்போது இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.